1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Wednesday, September 26, 2012

சோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2

காட்மியல் டெலுரைடு வகை செல்களின் அமைப்பு (structure) எப்படி இருக்கும், அதை தயாரிப்பது எப்படி, அது எப்படி வேலை செய்யும்,  என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

பெரும்பாலான சோலார் செல்களில் n-type  மற்றும் p-type  என்ற இரு வகை குறைகடத்தி(semiconductor)கள் இருக்கும் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். காட்மியம் டெலுரைடு (CdTe) என்பது  காட்மியம் என்று ஒரு தனிமமும், டெலுரியம் என்ற ஒரு தனிமமும் இணைந்த மூலக்கூறு ஆகும். இது p-வகை குறை கட்த்தி ஆகும்.



CdTe செல் வடிவமைப்பு

இந்த சோலார் செல்லின் வடிவமைப்பு கீழே இருக்கும் படத்தில் கொடுக்கப் பட்டிருக்கிறது.


இதில்மேலே கண்ணாடி இருக்கிறது. இது சாதாரண கண்ணாடி ஆகும். இது மின்சாரத்தைக் கடத்தாது.  அதன் அடியில் மின்சாரத்தை கடத்தும் தன்மை வாய்ந்த கண்ணாடி சிறிய அளவில் இருக்கும். ஆங்கிலத்தில்  Transparent conductive oxide அல்லது TCO என்று சுருக்கமாக சொல்லலாம். இதன் தடிமன் ஒரு மைக்ரான் இருக்கும். ஒரு மைக்ரான் என்பது, ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

அடுத்து காட்மியம் சல்பைடு படலம் இருக்கும். இது 0.1 மைக்ரான், அதாவது மைக்ரானில் பத்தில் ஒரு பங்கு இருக்கும். இதன் கீழே காட்மியம் டெலுரைடு சுமார் 5 மைக்ரான் தடிமனில் இருக்கும்.

இந்த காட்மியம் டெலுரைடு படலத்தில் நேரடியாக தாமிர கம்பியை வைத்து மின்சாரத்தை எடுத்தால் அதிக அளவில் மின் இழப்பு ஏறபடும். அதைத் தவிர்க்க வேண்டும். அதற்காக, இதன் கீழே, மின்சார கம்பியை இணக்க ‘contact' அல்லது 'back contact' என்று சொல்லக்கூடிய வேறு ஒரு படலம் இருக்கும். இதை ஜிங்க் (Zn) என்ற துத்தநாகம், டெலுரியம் மற்றும் தாமிரம் கலந்த ஒரு படலமாக வைத்திருப்பார்கள். இப்படி ஒரு புரோக்கர் வைத்திருப்பதால், அதிக இழப்பு இல்லாமல் மின்சாரத்தை எடுக்கலாம்.

இந்த படத்தில் இருக்கும் சோலார் செல்லில், சூரிய ஒளி மேலிருந்து கீழே வரும்.  அப்போது அந்த ஒளி ஆற்றலை இந்த சோலார் செல், மின்சார ஆற்றலாக மாற்றி விடும்.


Superstrate விவரம்.
இதில் இன்னொரு விடயம் என்ன என்றால், இதில் சாதாரண கண்ணாடி மேலெ இருக்கிறது. இதை முதலில் எடுத்துக்கொண்டு, இதன் கீழே TCO படியவைப்பார்கள். அதன் பின்னால் காட்மியம் சல்பைடு படிய வைப்பார்கள். அதற்கு பின் காட்மியம் டெலுரைடு, தொடர்ந்து back contact என்று முடியும். அதாவது படத்தைப் பார்த்தால் சாதாரண கண்ணாடி மேலே இருக்கும், அதில் தொடங்கி ஒவ்வொரு படலமாக கீழே இருக்கும் படலங்களை படிய வைப்பார்கள். இதற்கு ஆங்கிலத்தில்  Superstrate என்று சொல்வார்கள்.

இதற்கு பதில் சிலிக்கன் அல்லது சி.ஐ.ஜி.எஸ். போன்ற சோலார் செல் வகைகளில், கீழிருந்து ஒவ்வொரு படலமாக படியவைப்பார்கள். அதை substrate என்று சொல்வார்கள்.

முதல் முதலாக காட்மியல் டெலுரைடு சோலார்செல் தயாரிக்கும்போது கீழிருந்து மேலாகத்தான் , அதாவது substrate முறையில்தான் தயார் செய்தார்கள். ஆனால் யாரோ ஒருவர் superstrate முறையில் ”மேலிருந்து கீழே படிய வைத்தல்” முறையில் செய்தால், சோலார் செல் நன்றாக வேலை செய்யும், அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும் என்று கண்டுபிடித்தபின், எல்லோரும் இந்த முறையை பின்பற்றுகிறார்கள்.


CdTe பற்றிய விவரங்கள்.
நியாயமாகப் பார்த்தால், ஒரு காட்மியம் அணுவும் ஒரு டெலுரியம் அணுவும் சேர்ந்து காட்மியம் டெலுரைடு என்ற மூலக்கூறு உருவாகும்போது இது P-வகை குறைகடத்தி ஆக முடியாது.  குறை கடத்திகளில் N-வகை என்பதில் எலெக்ட்ரான்கள் அதிக அளவு இருக்கும். அதாவது, கட்டுறா மின்னணு (free electron) என்பது அதிக அளவு இருக்கும்.

அதைப் போலவே P வகை என்பதில்  கட்டுறா மின்னணுக்களை விட ஹோல் (hole) என்ற பொருள் அதிகமாக இருக்கும். இந்த எலக்ட்ரான் மற்றும் ஹோல் இரண்டும் சரிசமமாக இருந்தால் அது intrinsic semiconductor என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். தமிழில் என்ன என்று தெரியவில்லை. ஒருவேளை தூய குறைகடத்தி என்று சொல்லலாமோ என்னவோ.

காட்மியமும் டெலுரியமும் சரிசமமாக இருந்தால்,  அது P-வகையாகவோ அல்லது N வகையாகவோ இருக்காது. intrinsic என்ற நியூட்ரல் வகையில் இருக்கும். ஆனால் இயற்கையிலேயே, காட்மியத்தையும் டெலுரியத்தையும் சேர்த்தால் வரும் பொருளில் கொஞ்சம் டெலுரியம் அதிகம் சேர்ந்துவிடுகிறது, அதாவது 10 கிராம் காட்மியமும் 10 கிராம் டெலுரியமும் சேர்த்தால், 9.999 கிராம் காட்மியமும் 10 கிராம் டெலுரியமும்தான்  சேர்கிறது. மிச்சம் காட்மியம் அப்படியே இருக்கிறது.  இது ஏன் என்று எனக்கு தெரியாது, ஆனால் இப்படித்தான் இயற்கையில் நடக்கிறது.

இப்படி வந்த காட்மியம் டெலுரைடு,  இதில் டெலுரியம் கொஞ்சம் அதிகமாக இருப்பதால், P வகை குறைகடத்தியாக இருக்கிறது.

காட்மியம் டெலுரைடு தயாரிப்பில் சில தந்திரங்கள் (tricks) செய்தால் இதை N-வகையாகவும் செய்ய முடியும். தற்சமையம் இது P-வகையாகவே பயன்படுத்தப் படுகிறது.

CdS பற்றிய விவரங்கள்

இதைப்போலவே, காட்மியம் தனிமத்துடன் சல்ஃபர் என்ற கந்தகம் இணைந்து ‘CdS’ காட்மியம் சல்ஃபைடு என்ற பொருள் உருவாகிறது. இதில், காட்மியமும் கந்தகமும் சரியான அளவில் இணைவதில்லை. அதனால் , காட்மியம் சல்பைடு இயற்கையிலேயே N-வகை குறைகடத்தியாக இருக்கிறது.

இப்படி காட்மியம் டெலுரைடும், காட்மியம் சல்ஃபைடும் சேர்த்து உருவாக்க்குவது தான் “காட்மியம் டெலுரைடு சோலார் செல்” ஆகும்.



தயாரிக்கும் முறை

இந்த செல்லில் காட்மியம் டெலுரைடு, மற்றும் காட்மியல் சல்பைடு இரண்டும்தான் முக்கிய படலங்கள். காட்மியம் சல்பைடு ப்டிய வைத்தல் பற்றி ஏற்கனவே CIGS செல் தயாரிப்பில் பார்த்து இருக்கிறோம். CdTe படலம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று இங்கே பார்க்கலாம்.

காட்மியம் டெலுரைடு படலம் தயாரிக்க பல முறைகள் இருக்கின்றன.  தற்போது வணிக ரீதியில் (commercial) தயாரிக்கும் முறை Close Spaced Sublimation
என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. சுருக்கமாக CSS என்று சொல்லப்படும். இந்த இடத்தில் “Close spaced” என்பதற்கு ‘குறுகிய இடைவெளி’ அல்லது ‘குறைந்த இடைவெளி’  என்று தமிழாக்கம் செய்யலாம். Sublimation என்பது ‘நேரடியாக திடப்பொருளில் இருந்து ஆவியாவது’.  சாதாரணமாக ஒரு திடப்பொருளை சூடுபடுத்தினால் அது முதலில் திரவமாகும், இன்னும் சூடுபடுத்தினால் பிறகு ஆவியாகும். எ.கா. பனிக்கட்டி உருகி, நீராக மாறி, பிறகு ஆவியாவது.

சில பொருள்கள், திடநிலையில் இருந்து சூடுபடுத்தியதும், திரவமாக மாறாமல், நேரடியாக ஆவியாகிவிடும். எ.கா. கற்பூரம், பூச்சி உருண்டை என்று சொல்லப்படும் நாஃப்தலின் உருண்டைகள், ‘உலர் பனி’ அல்லது DRY ICE என்ற ’திட நிலை கார்பன் டை ஆக்சைடு’ ஆகியவை வெளியில் வைத்தால் உருகாமல் நேரடியாக ஆவியாகும்.

காட்மியம் டெலுரைடு ஏற்கனவே ஏதாவது ஒரு வகையில் தயாரித்து வைத்து இருப்பார்கள். அதை சரியான தடிமனில் படிய வைக்கவே CSS முறை பயன்படுத்தப் படுகிறது. இது எப்படி என்றால், கண்ணாடி ,TCO, காட்மியம் சல்பைடு படியவைத்த பின், அதற்கு மிக அருகில் (அதாவது 2 மிமீ முதல் 20 மி மீ அளவு இடைவெளியில்), காட்மியல் டெலுரைடை வைக்க வேண்டும். பிறகு, அந்த அறை(Chamber) யில் இருக்கும் காற்றை முழுதும் வெளியில் எடுத்து, வெற்றிடம் ஆக்க வேண்டும். அடுத்து, மிகச் சிறிய அளவு நைட்ரஜன் வாயுவை உள்ளே செலுத்துவார்கள். அப்போது Pressure (அழுத்தம்) சுமார் 10 torr என்ற அளவில் இருக்கும். சாதாரணமாக காற்று மண்டல அழுத்தம் 760 torr  என்ற அளவில் இருக்கும். எனவே ஏறக்குறைய காற்று மண்டலத்தை விட 76ல் ஒரு பங்கு அழுத்தத்திற்கு அந்த அறை இருக்கும்.

இந்த நிலையில், காட்மியம் டெலுரைடை சுமார் 550 அல்லது 650 C அளவு வெப்பநிலை போகும்வரை சூடுபடுத்துவார்கள். அதே சமயம் கண்ணாடி/TCO/காட்மியல் சல்பைடை சுமார் 500 C வரை சூடுபடுத்துவார்கள். அப்போது காட்மியல் டெலுரைடு ஆவியாக மாறி, கண்ணாடிமேல் படியும்.  கண்ணாடியின் வெப்பநிலை கொஞ்சம் குறைவாக இருப்பதால், திடப்பொருளாக மாறும். இதற்கு வெப்ப நிலையையும், அழுத்தத்தையும் நன்றாக கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தப் படலம் சரியாக வரும்.

இந்த முறை தவிர, மின் வேதியியல் (electrochemical) முறை, ஸ்கிரீன் ப்ரிண்டிங் (Screen printing) முறை என்று பிற முறைகளும் இருக்கின்றன. அவற்றிலும், இந்த சோலார் செல் சிறப்பாகவே வருகிறது. அதனால் CSS முறைதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்று நிச்சயமாக சொல்ல முடியாது. இப்போதைக்கு, First Solar என்ற கம்பெனி இந்த முறையில் வணிக ரீதியில் இந்த முறையை பயன்படுத்தி வருகிறது. அவ்வளவே. மற்ற முறைகளையும் வணிக ரீதியில் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. அப்படி வந்தால் எதில் செலவு குறைவோ அதுதான் பரவலாக நடைமுறையில் வரும்.


குறிப்பு
இந்த காட்மியம் டெலுரைடு வகை சோலார் செல்லில் n மற்றும் p வகை இரண்டிலும் Cd காட்மியம் தனிமம் இருக்கிறது.  அதனாலேயே நச்சுத்தன்மை பற்றி சிலபல கேள்விகள் வருகின்றன.

சி.ஐ.ஜி.எஸ். என்ற வகை சோலார் செல்லில் கூட, n-வகையில் காட்மியம் இருக்கிறது. ஆனால் அது 0.1 மைக்ரான் அளவில் இருப்பதால் “காட்மியம் நச்சு வாயுவை உருவாக்குமே” என்று யாரும் கத்துவதில்லை. 5 அல்லது 10 மைக்ரான் தடிமன் இருந்தால்தான் அது பிரச்சனைக்கு உரிய அளவாக மாறுகிறது.

Friday, September 21, 2012

சோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி1

இந்தப் பதிவில், காட்மியம் டெலுரைடு (cadmium telluride) என்ற வகை சோலார் செல் பற்றி பார்க்கலாம். இது பல CONTROVERSY என்ற சச்சரவுகளைக் கொண்டது. இப்போதைக்கு, வணிக ரீதியாக (economically, commercially) இதுதான் குறைந்த விலைக்கு தயாரிக்க முடிகிறது. நீங்கள் “எனக்கு இவ்வளவு யூனிட் மின்சாரம் வேண்டும். சோலார் செல் மூலம் வேண்டும். செலவு பற்றி கவலை இல்லை, ஆனால் பல வருடங்களுக்கு வேலை செய்ய வேண்டும்” என்று சொன்னால், அதை பல வருடங்களுக்கு நல்லபடியாக வரும் வகையில் சிலிக்கன், சி.ஐ.ஜி.எஸ். மற்றும் காட்மியம் டெலுரைடு சோலார் செல்களால் செய்ய முடியும். இந்த மூன்றிலும் விலை குறைந்தது காட்மியம் டெலுரைடு.

ஆனால், காட்மியம் (cadmium) என்பது கொஞ்சம் விவகாரமான தனிமம். இதில் என்ன பிரச்சனை என்று இப்போது பார்க்கலாம். தப்பித்தவறி சோலார் செல் இருக்கும் இடம் தீப்பிடித்து எரிந்தால், அதில் இருக்கும் காட்மியமும் சேர்ந்து எரிந்தால், அது நச்சு வாயுவாக மாறும். அதனால் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் இதை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்கள். இந்த செல்லை வாங்கிப் பயன்படுத்த தயங்குகிறார்கள். இவற்றை தயாரிக்கும் நிறுவனங்களோ, “நாங்கள் இந்த சோலார் செல்லில் இருக்கும் காட்மியத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம், நெருப்பு பட்டாலும் இந்த காட்மியம் வெளியே வராது, சோதனை மூலம் நிரூபிக்கிறோம்” என்று சொல்கின்றன.

அங்கே நிலைமை இப்படி இருக்க, நம் நாட்டில் உள்ள நிலைமை என்ன என்று பார்க்கலாம். இங்கே பல விதமான பேட்டரிகளில், காட்மியம் இருக்கின்றது. இவை ‘நிக்கல் காட்மியம்’ பாட்டரி அல்லது சுருக்கமாக ஆங்கிலத்தில் "Ni-Cd" என்று எழுதி இருக்கும். இது டிஜிட்டல் காமிரா, குழந்தைகளுக்கான சில ரிமோட் விளையாட்டு பொருள்கள் ஆகியவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.தோராயமாக கணக்கிட்டால், ஒரு வீட்டிற்கு தேவையான சோலார் செல்லில் எவ்வளவு காட்மியம் இருக்கிறதோ, அதே அளவு காட்மியம் 10 அல்லது 15 பாட்டரிகளில் இருக்கிறது.


 இந்த பாட்டரிகளை குப்பையில் போட்டு எரிக்கக் கூடாது. ஏனென்றால் அதில் இருக்கும் காட்மியம் எரிந்தால் நச்சு வாயு வரும். ஆனாலும் நடைமுறையில் இதை நாம் குப்பையில் வீசி விடுகிறோம். குப்பையை நகராட்சி அள்ளி சென்று ஒரு இடத்தில் போடுகிறது. சென்னையில் ‘கொடுங்கையூர்’, ‘பள்ளிக் கரணை’ போன்ற இடங்களில் இதைப் பார்க்கலாம்.

பல சமையங்களில் குப்பையானது எரிக்கப் படுகிறது. இது சட்டப்படி தவறு என்றாலும், நடைமுறையில் தடுக்க முடிவதில்லை. அந்த வகையில் பார்த்தால், நமக்கு இப்போது இருக்கும் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஏற்கனவே ஆபத்தில் இருக்கிறோம், இந்த சோலார் செல் பயன்படுத்தினால், ஆபத்து கொஞ்சம் அதிகமாகும் என்றுதான் சொல்ல முடியும். தவிர யாரும் விலை கொடுத்து வாங்கிய சோலார் பேனலை அவ்வளவு சீக்கிரம் தூக்கி எறிய மாட்டார்கள்.  இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு வேலை செய்த பின் ஒருவேளை எறியலாம்.

சரி, இந்த சோலார் பேனல் வீட்டில் இருக்கும்போது ஏதாவது காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு எரிந்தால் என்ன செய்வது?

வீட்டில் பல பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கின்றன. காட்மியம் பாட்டரிகளும் இருக்கலாம். இதனாலேயே வீடு எரியும்போது நச்சு வாயுக்கள் வரும். ஆனால் வீடு எரியும்போது எல்லோருடைய கவனமும், ”உடனடியாக உயிர் சேதத்தை தடுத்தால் போதும்” என்ற அளவில் இருக்கும். எவ்வளவு பொருள் நட்டம், நச்சு வாயு வந்து அதனால் பிறகு பாதிப்பு இருக்குமா? (Long term health issue) என்பது பற்றி கவலைப் படுவது இல்லை. இதுதான் உண்மை நிலை.

இந்த அளவிலேயே காட்மியம் டெலுரைடு சோலார் பேனல் பயன்படுத்துவதால் வரும் ஆபத்தையும் எதிர்நோக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  மொத்தத்தில், இது விவாதத்திற்கு உரியது தான். அதே சமயம் இதற்கு சமமான அளவில் இருக்கும், இதற்கு சமமான அளவு தாக்கம் கொண்ட பிற பிரச்சனைகளை எப்படி அணுகுகிறோமோ, அதைப் போலவே இதையும் அணுக வேண்டும் என்று நினைக்கிறேன். பாட்டரி எரிந்து வரும் நச்சு வாயுவும், சோலார் பேனல் எரிந்து வரும் நச்சு வாயுவும் நம்மை ஒரே போலத்தான் பாதிக்கும். இப்படி இருக்கும்போது,பாட்டரி வாங்க தயங்காதவர்கள் சோலார் பேனல் வாங்க (நச்சுத்தன்மையை காரணமாகக் கொண்டு) தயங்கக் கூடாது.

எப்படி இருந்தாலும் சரி, இதை நாம் இப்போது வாங்க வேண்டியதில்லை, இது எப்படி இருக்கும், எப்படி தயாரிக்கலாம், எப்படி வேலை செய்யும் என்பதை தெரிந்து கொள்வோம், தெரிந்து கொள்வதால் எந்த ஆபத்தும் வராது அல்லவா!


Sunday, March 4, 2012

சூரிய ஒளியில் மின்சாரம் - தற்போதைய நிலை

இப்போது மின்வெட்டு அதிக அளவில் இருக்கிறது. கோடையில் இன்னும் அதிகமாகும் என்று தோன்றுகிறது. டீசல் விலையும் ஏறிக் கொண்டு இருக்கிறது. தற்போதைய நிலையில் சூரிய ஒளி மின்சாரம் சரிவருமா? எந்த சூழ்நிலைகளுக்கு சரிப்படும் என்பது பற்றி நான் சேகரித்த விவரங்கள் இங்கே.


முதலில் இந்தியாவில் மின்சாரம் தேவை மற்றும் பங்கிடப்படும் முறை பற்றி சில விவரங்கள். நம் மின்சாரத்தை பயன்படுத்தும் போது வீட்டிற்கு ஒரு யூனிட்டிற்கு இவ்வளவு, இதே தொழிற்சாலையில் ஒரு யூனிட்க்கு இவ்வளவு என்று வேறு வேறு விலை உண்டு. ஆனால் வீட்டுக்கு என்று எடுத்துக் கொண்டால், ஒரு யூனிட்டை காலையில் பயன்படுத்தினாலும், இரவில் பயன்படுத்தினாலும் அதே விலைதான் தமிழக அரசாங்கம் வாங்குகிறது.


மின்சாரம் பயன்படுத்தும் அளவு


பொதுவாக தொழிற்சாலையில் பகலில் அதிகம் மின்சாரம் பயன்பாடு இருக்கும். இரவில் சில தொழிற்சாலைகளே இயங்குவதால் அவ்வளவாக மின்சாரத் தேவை இருக்காது. வீட்டிலோ, காலையில் அதிக அளவு தேவையும் மாலையில் அதிக தேவையும் இருக்கும். பகலிலும் இரவிலும் ஓரளவே இருக்கும். காலையில் மிக்சி, மின்சார குக்கர் என்று இருக்கலாம். மாலையில் தொலைக் காட்சி, கிரைண்டர் என்று இருக்கலாம். பகலில் வீட்டில் ஆள் இருந்தால் மின்விசிறி, இரவில் மின் விசிறி என்று ஓரளவு தேவை இருக்கும்.
மொத்தத்தில் காலையிலும் மாலையிலும் அதிக அளவு மின்சார தேவை இருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் peak demand என்று சொல்வார்கள்




மின் சந்தை


ஒவ்வொரு நாளும் மின்சாரத்தை தமிழக அரசு ‘இந்திய மின்சார சந்தை’யில் வாங்கித் தரும். இப்படி வாங்கும்போது அதன் விலை என்னவாக இருக்கும்? நாம் வீட்டில் பயன்படுத்தினால் எல்லா நேரத்திலும் ஒரே விலை என்று பார்த்தோம். ஆனால், இந்திய மின்சார சந்தையில் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை விலை மாறும்! peak demand என்று சொல்லும் அதிக பட்ச தேவை இருக்கும் நேரத்தில் அதன் விலை யூனிட்கு 12 ரூபாய்க்கும் மேல் இருக்கும். இதே இரவில் (அல்லது தேவை குறைந்த நேரத்தில்) ஒரு யூனிட்க்கு 2 ரூபாய்க்கும் விற்கும்! இது மின்சாரம் தயாரிக்கும் இடத்தில். அதன்பிறகு மின்சாரத்தை உங்கள் மாநிலத்திற்கு (ஊருக்கு) கொண்டு செல்லும் போது ஆகும் இழப்பு தனி, அது உங்களைச் சார்ந்தது.

இதனால்தான் விவசாயிகளுக்கு இலவச (விலையில்லா?) மின்சாரம் கொடுப்பது இரவில் மட்டுமே. குறைந்த விலையில் வாங்கி இலவசமாகக் கொடுப்பதால், ‘மானிய’ தொகை குறையும்.


மின்சாரம் கொண்டு வருதல் , இழப்பு



வாங்கிய மின்சாரத்தை கொண்டு வரும்போது இழப்பு தவிர, நினைத்த அளவு கொண்டுவர முடியாது, கொண்டு வரும் பாதை (corridor) போக்குவரத்து பாதை போல ஓரளவுதான் தாங்கும், இது சில வருடங்களுக்கு மின் இருந்ததை விட இப்போது பரவாயில்லை. ஆனால், ‘நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்’ என்றால் மின்சாரத்தை வேறு இடத்தில் வாங்கிவிடலாம், ஓரளவுக்கு மேல் கொண்டு வர முடியாது. நம் மாநிலத்திலேயே பெருமளவு தயாரித்தால் தான் தமிழ் நாட்டில் எல்லா ஊருக்கும் மின்சாரம் கொடுக்க முடியும்.

இழப்பு என்பது உன்மையான இழப்பாக இருக்கலாம். மின்சாரம் கம்பியில் செல்லும் போது கொஞச்ம் வெப்பமாக மாறும், இதை தவிர்க்க இயலாது. அல்லது இழப்பு என்பது திருட்டாக இருக்கலாம். திருட்டு என்பது அந்த அந்த ஊரில் நடக்கும். ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலம் வரும் மின்சாரம் அதிக மின் அழுத்தத்தில் (very high voltage) இருக்கும், இதில் சும்மா கொக்கி போட்டு எடுக்க முடியாது. எனவே நம் ஊருக்கு மின்சாரம் வந்த பின்னர் தான் திருட்டால் ஏற்படும் இழப்பு இருக்கும். வேறு மாநிலத்தில் வாங்கியமின்சாரம் இங்கு வரும்போது உண்மையான இழப்பு 15 % லிருந்து 20% இருக்கலாம்.

டீசல் ஜெனரேட்டர்


சரி, அரசாங்க மின்சாரம் வரவில்லை, அத்தியாவசிய தேவைக்கு டீசல் ஜென்ரேட்டர் (Diesel Generator) பயன்படுத்தலாம் என்றால் எவ்வளவு செலவாகும்? ஒரு டீசல் ஜெனரேட்டரின் விலை அதிகம் இல்லை, டீசல் விலைதான் அதிகம். ஒரு ஜெனரேட்டர் 5 முதல் 8 வருடங்கள் வரும் என்று சொல்லி கணக்கிட்டால், ஒரு யூனிட்க்கு 18 ரூபாய் வரும். ஆனால் இதில் நீங்கள் ஜெனெரேட்டர் தயாரிக்கும் எல்லா மின்சாரத்தையும் பயன்படுத்தினால் தான் யூனிட்ட்க்கு 18 ரூபாய். நீங்கள் குறைவாகப் பயன்படுத்தினால், ஒரு யூனிட்க்கு 30 ரூபாய் வரை செலவழிப்பிர்கள்!

இன்வெர்டர்


இன்வெர்டர் (Inverter) என்ற வகை கருவியில் மின்கலம் அல்லது பேட்டரியில் மின்சாரத்திஅ சேமித்து பின்னர் தேவைப்படும்போது பயன்படுத்தினால் அதன் செலவு என்ன? மின்கலங்கள் சில வருடங்களில் மாற்ற வேண்டும். ஒரு மின்கலம் மூன்று அல்லது நான்கு வருடங்கள் வரும் என்று வைத்துக் கொண்டால், ஒரு யூனிட் சேமிக்க 12 ரூபாய் வரை ஆகும். இது தவிர நீங்கள் மின்சாரத்தை சேமிக்கும்போது அரசுக்கும் ஒரு யூனிட்க்கு 4 ரூபாய் கொடுக்க வேண்டும். பேட்டரி விலை குறைவது போல இல்லை, அதனால் இந்த நிலைதான் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்வெர்டரில் நமக்கு உகந்தது என்ன என்றால், நமக்கு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம், அதே சமயம் டீசல் ஜெனரேட்டர் போல சத்தம் மற்றும் புகை கிடையாது.

சோலார் பேனல்


சோலார் பேனல் (solar panel) வகையில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன. சோலார் பேனல் 20 வருடங்களுக்கு வேலை செய்யும், ஆனால் முக்கால்வாசி முதலீடையும் முதல் நாளே செய்ய வேண்டும். நம்மில் பலரும் வீடு (apartment அல்லது தனி வீடு) வாங்க் வேண்டும் என்றால் வங்கியில் கடன் வாங்கிதான் வீடு வாங்குவோம். எல்லா பணத்தையும் முதலில் கொடு என்றால் 100க்கு 90 பேரால் வாங்க முடியாது. வங்கி ஏன் வீட்டுக்கு மட்டும் 20 வருடம் த்வணையில் கடன் தருகிறது? வீடு திருடு போகாது, அங்கேயே இருக்கும் என்பதால். சோலார் பேனலை எடுத்து செல்ல முடியும். அதனால் சோலார் பேனலுக்கு 20 வருடம் தவணையில் கடன் கொடுக்க மாட்டார்கள். எல்லா பணத்தையும் முதல் நாளே கொடு என்பதால் சோலார் பேனல் வாங்குவது மனதிற்கு பிடிக்காது.


வீட்டுக்கு பகலிலும் இரவிலும் சோலார் பேனல் மூலம் மின்சாரம் வேண்டும் என்றால் அதிக செலவு ஆகும். சோலார் பேனலில் பகலில் மட்டும் மின்சாரம் வரும். அதை சேமித்து இரவில் பயன்படுத்த, மின்கலம்/பாட்டரி தேவை. இன்வெர்டர் போல இதிலும் மின்சாரத்திஅ சேமிக்க மட்டும் ஒரு யூனிட்டிற்கு 12 ரூபாய் செல்வாகும். ஒரு பேச்சுக்கு நாம் செல்வு செய்தாலும், மூன்று நாட்கள் மழை என்றால் இரண்டாம் நாள் முதல் மின்சாரம் கிடையாது. எனவே சோலாரை மட்டும் நம்பி ஒருவர் வீட்டில் மின்சாரம் பயன்படுத்துவது நடைமுறையில் ஒவ்வாதது.


நடைமுறையில் எது சாத்தியம் ஆகலாம்?

பள்ளி, அலுவலகம் போன்ற இடங்களிலும், வீட்டிலும் பாட்டரி இல்லாமல், அல்லது குறைந்த அளவு பாட்டரி வைத்து சில விளக்குகள் மற்றும் மின் விசிறிகளை ஓட்ட இது பயன்படலாம். ஒரு கிலோ வாட் பேனல், பாட்டரி மற்றும் மற்ற சாதனங்களுடன் , 5 வருட கியாரண்டி உடன் 2 லட்சம் ஆகிறது. (சோலார் பேனலுக்கு 20 வருட கியாரண்டி, மற்ற பொருளகளுக்கு 5 வருடம்). இதில் 4 ட்யூப் லைட், 6 மின்விசிறிகளை ஓட்டலாம். 5 வருடம் கழித்து பாட்டரி மாற்ற வேண்டி வரலாம்.

விளம்பரத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்திற்கு சில மாநிலங்களில் அதிக கட்டணம் (யூனிட்க்கு ரூபாய் 18 வரை)வசூலிக்கிறார்கள். அந்த இடங்களிலும் சோலார் பேனல் பயன்படும். இதில் பகல் முழுதும் மின்சாரம் தயாரித்து, பேட்டரியில் சேமித்து, இரவில் பயன்படுத்த வேண்டும் என்பதால் பேட்டரி செலவு சற்று அதிகம், ஆனாலும் இது பரவாயில்லை என்று சில நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன

இந்த பதிவை தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு முன் தொடங்கினேன். நாளுக்கு நாள் எல்லா பொருள்களும் அதிக விலைக்குத்தான் விற்கின்றன. சோலார் பேனல் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது. பாட்டரி, கம்பி என மற்ற பொருள்களின் விலையும் கூடும். என் கணிப்பு என்ன என்றால், இன்னும் சில வருடங்களில் பேனலின் விலை சற்று குறையும், கம்பி பாட்டரிகளின் விலை கொஞ்சம் உயரும், ஆனால் சோலார் சிஸ்டம் (பேனல், பாட்டரி என்று அனைத்தும் சேர்ந்தது) அதே விலையில் இருக்கும். ஆனால், டீசல் ஜெனரேட்டர் மூலம் தயாரிக்கும் மின்சாரத்தின் விலை அதிகமாகும். அரசு வழங்கும் மின்சாரம் சரியாக எல்லா நேரமும் கிடைக்காது. பணத்தின் மதிப்பு குறையும். ஒரு சாதாரண bike வாங்கும் செலவு ஒரு லட்சம் ஆகலாம். அப்போது வீட்டுக்கும் ஆபிசுக்கும் சோலார் பேனலில் இரண்டு லட்சம் செலவு செய்து வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாகும் என்று நினைக்கிறேன்.


டிஸ்கி: பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை என்று சொல்வார்கள், அந்த நிலைதான் இருக்கிறது. சொற்குற்றம் இருந்தால் விட்டு விடுங்கள், பொருள் குற்றம் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், திருத்தி விடலாம்.