1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Saturday, May 8, 2010

சோலார் செல் -Tracking (திசை மாற்றுவது, நகர்த்தல் )

சோலார் செல்லை எப்படி வைக்க வேண்டும்? அப்படியே வீட்டு மொட்டை மாடியில் படுக்க வைக்கலாமா? எந்த கோணத்தில் வைப்பது? என்ற கேள்விகள் வரும். சூரியன் காலையில் கிழக்கே உதித்து மாலையில் மேற்கே மறைகிறது. சோலார் செல்லும் காலை முதல் மாலை வரை சூரியனைப் பார்த்து திரும்பிக் கொண்டே இருந்தால், சூரியகாந்திப் பூவைப் போல இருந்தால், அதிக மின்சாரம் கிடைக்கும்.

இது தவிர, ஒவ்வொரு சீசனிலும், சூரியன் இருக்கும் திசை கொஞ்சம் மாறும். இதற்கு ஏற்றவாறு கோணத்தை மாற்ற வேண்டும்.

தவிர, இந்தியாவில் இருப்பவர்களும், ஆஸ்திரேலியாவில் இருப்பவர்களும், ஒரே கோணத்தில் இதை வைக்கக் கூடாது. நாம் உலகத்தில் வேறு வேறு இடங்களில் இருப்பதால், இது மாறும். இந்தியாவில் மே, ஜூன் மாதம் வெயில் காலம் என்றால், ஆஸ்திரேலியாவில் அது குளிர்காலம். இதை எல்லாம் யோசித்து சரியான கோணத்தில் சோலார் செல்லை வைக்க வேண்டும். அதன் திசையையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி செய்தால், அதிக அளவு திறன் கிடைக்கும். ஆனால் கூடவே பிரச்சனையும் வரும். இப்படி சோலார் செல்லின் திசையை மாற்றும் கருவிக்கு tracker என்று சொல்வார்கள். தமிழில் திசைமாற்றும் கருவி என்று சொல்லலாம். இதில் கூட பல வகைகள் உண்டு. காலை முதல் மாலை வரை திசையை மாற்றுவது ‘ஒரு திசை மாற்றும் கருவி' (one axis tracker). காலை-மாலையும் மாற்றும், சீசனுக்கு ஏற்றவாறு மாற்றும் என்பது இருதிசை மாற்றும் கருவி (two axis tracker). இதில் ஆடோமேடிக், மானுவல் என்று இரு வகை உண்டு.

இப்படி திசைமாற்றும் கருவியைப் பயன்படுத்தினால் என்ன லாபம்? நமக்கு உடனடியாகத் தெரிவது, ஒரு சோலார் பேனலை வைத்து அதிக மின்சாரம் தயாரிக்கலாம். சோலார் பேனலின் விலை அதிகம், திசைமாற்றும் கருவியின் விலை குறைவு. இது தவிர இன்னொரு நுணுக்கமான விசயமும் இருக்கிறது. இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.

திசைமாறாத நிலையான (fixed) சோலார் செல் பயன்படுத்தினால், உங்கள் வீட்டிற்கு மின்சாரம் கொடுக்க ஐந்து சோலார் பேனல் வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இது நடுப்பகலில் 1000 வாட் மின்சாரம் தரும். இந்த மின்சாரம் DC மின்சாரம் ஆகும். மற்ற நேரங்களில் குறந்த அளவு மின்சாரம் தரும். நீங்கள், வீட்டிற்கு பயன்படுத்தும் மின்சாரம் AC மின்சாரம் என்பதால், 1000 வாட் DC மின்சாரத்தை AC மின்சாரமாக்கும் கருவி வேண்டும்.

இதே திசைமாற்றும் கருவிகளுடன் சோலார் செல் பயன்படுத்தினால், நான்கு பேனலே போதும். இது நடுப்பகலில் 800 வாட் மின்சாரம் தரும். மற்ற நேரங்களில், நிலையான (fixed) சோலார் செல்லை விட அதிக அளவு (ஆனால் 800 வாட் அல்லது குறைவாகத்தான்) மின்சாரம் தரும். ஒரு நாள் முழுவதும் கணக்கெடுத்துப் பார்த்தால் இரண்டும் மொத்தத்தில் ஒரே அளவு மின்சாரம் தரும். இந்த சிஸ்டம் காலை முதல் மாலை வரை சூரிய காந்திப் பூவைப்போல சோலார் பேனலைத் திருப்புவதால் நான்கு பேனல்களிலேயே தேவையான அளவு மின்சாரத்தை எடுத்துவிடுகிறது. ஆனால் peak மின்சாரம் 800 வாட்தான் இருக்கும்.

இதனால் என்ன பயன் என்றால், நமக்கு 800 வாட் DC மின்சாரத்தை AC மின்சாரமாக்கும் கருவி இருந்தால் போதும். இந்த எடுத்துக்காட்டில் இது பெரிய விசயம் இல்லை. ஆனால் பெரிய அளவில் செய்யும்போது, இதில் நிறைய செலவு மிச்சமாகும்.


சரி அப்போ எல்லோரும் இதைப் பயன்படுத்தலாமே? இதை பயன்படுத்துவதில் என்ன குறை?

ஆட்டோமேடிக் வேலை செய்ய மின்சாரம் தேவைப்படும்! மானுவல் என்றால் பல தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கும், ஆனால், ஒரு நாள் அவர்கள் ‘வேலை நிறுத்தம்' என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது! இது எல்லாம் பெரிய விசயம் இல்லை, இது எல்லாத் தொழில்களிலும் இருப்பதுதான். முக்கியமான பிரச்சனை என்ன என்றால், இவை எல்லாம் ‘மெக்கானிகல் பார்ட்ஸ்'. நாலைந்து வருடம் கழித்து மாற்ற வேண்டி வரும். சோலார் செல்லுக்கு 20 அல்லது 25 வருடம் கியாரண்டி தருவது போல இதற்கு தர முடியாது. ஐந்து வருடம் கழித்து, இதை மாற்ற வேண்டிய செலவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால், பல சமயங்களில் இதனால் பெரிய லாபம் இருப்பதாகத் தெரியவில்லை. “எனக்கு தலைவலி வேண்டாம், மெயிண்டெனென்ஸ் எல்லாம் செய்ய வேண்டாம்” என்றால் திசை மாற்றும் கருவி பயன்படுத்த வேண்டாம்.

தலைவலி இல்லாமல், மெயிண்டெனென்ஸ் இல்லாமல் பல வருடங்கள் தொடர்ந்து உழைக்கும் திசை மாற்றும் கருவிகளை செய்வது எப்படி என்ற கோணத்திலும் ஆராய்ச்சி நடக்கிறது.


சோலார் செல் ஆராய்ச்சியில் தற்போதைய சூடான செய்தி, அமெரிக்காவில் MIT பல்கலைக் கழகத்தில், ஒரு காகிதத்தின் மேல், கலவைகளைத் தடவி சோலார் செல் தயாரித்திருக்கிறார்கள். இந்த ரசாயனக் கலவைகளத் தடவ, இங்க்-ஜெட் ப்ரிண்டர் பயன்படுத்தி இருக்கிறார்கள். (உள்ளே இங்க்கை எடுத்துவிட்டு, ரசாயனத்தை வைப்பார்கள். வேண்டிய இடத்தில் இது ப்ரிண்ட் செய்யும், அதாவது கலவையைப் படிய வைக்கும்). இதை கமர்சியலாகக் கொண்டு வர 10 வருடங்களுக்கு மேல் ஆகும் என்று சொல்கிறார்கள்.

6 comments:

வடுவூர் குமார் said...

என்ன‌து 10 வ‌ருட‌மாகுமா!ஏன் இவ்வ‌ள‌வு கால‌ம் பிடிக்கிற‌து?

கிராமத்து கருப்பன் said...

அமெரிக்காவில் பூங்காக்கலிலும் தானியங்கி சிக்னலிலும் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இந்தியாவில் ஏன் வரவில்லை.

S. Ramanathan said...

நன்றி வடுவூர் குமார் மற்றும் கிராமத்து கருப்பன் அவர்களே. வேலை அதிகமானதால் பிளாக் பக்கமே வர முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். 10 வருடம் ஆகக் காரணம், ஆராய்ச்சியில் காண்பிப்பது ஒரு மாதிரி. அதை குறைந்த செலவில், பல வருடங்களுக்கு உழைக்கும் படி கொண்டு வர நேரமாகும். 10 வருடம் என்பதே கொஞ்சம் ஆப்டிமிஸ்டிக் என்று சொல்லலாம்.

தமிழகத்தில் சில சிக்னல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். நிச்சயமாக, சென்னை-திருச்சி சாலையில், எமர்ஜென்சி போன் எல்லாம் சோலாரில் இயங்குகின்றன, அடுத்த முறை வந்தால் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சோலார் போட்டோ வோல்டாயிக் பயன்பாடு இந்தியாவில் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.

c.thiru said...

nan en veettirkku solar minsaram payan patuthha virumbukiren nan enna seiya venndum?

c.thiru said...

nan en veettirkku solar minsaram payan patuthha virumbukiren nan enna seiya venndum?

Anonymous said...

antha rasayana kalavaikalin name enna