1. எரிமக் கலன் - அட்டவணை
 2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
 3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
 4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
 5. காலத்தின் வரலாறு - அட்டவணை
 6. சோலார் செல் அட்டவணை

Monday, June 30, 2008

மைக்ரோ வேவ் வேலை செய்யும் விதம் பகுதி-3

மைக்ரோ வேவில் உலோகங்களை வைத்தால் என்ன பிரச்சனை?

உலோகங்களில் மைக்ரோ வேவ் ஊடுருவி செல்லாது. அதே சமயம், உலோகங்கள் மைக்ரோ வேவை ‘உறிஞ்சவும்' செய்யாது. மைக்ரோவேவ் பட்டவுடன் உலோகங்களின் வெளிப்புறத்தில் (இதை ஆங்கிலத்தில் இந்த துறையில் skin அதாவது தோல் என்று சொல்வார்கள்)உடனடியாக எலக்ட்ரான்கள் அதிக அளவில் கூடும். இதனால் மைக்ரோ வேவ், சுலபமாக எதிரொளிக்கப்படும் (reflection).

உலோகங்கள் மிகச்சிறந்த மின்கடத்திகளாக இருப்பதற்கு அதிக அளவு கட்டுறா எலக்ட்ரான் என்ற free எலக்ட்ரான்கள் இருப்பது காரணம். இப்படி எலக்ட்ரான்கள் சுதந்திரமாக இருக்கும் இடத்தில், மின்காந்த அலைகள் எளிதில் எதிரொளிக்கப்படும். ஒரு எடுத்துக்காட்டாக, வாயு மண்டலத்தில் இருக்கும் அயனோஸ்பியர் (ionosphere) என்ற மண்டலத்தில், நிறைய சுதந்திர எலக்ட்ரான்கள் மற்றும் அயனிகள் இருக்கும். அதில் பட்டு ரேடியோ அலைகள் திரும்புவதால்தான் ஒரு ரேடியோ டவரில் இருந்து சிக்னல் அதிக தூரம் செல்ல முடிகிறது.
 • இதில் short wave போன்ற ரேடியோக்கள் வருவதில்லை. அவை அயனோஸ்பியரை ஊடுருவி செல்லும். சாடிலைட் அவற்றை வாங்கி திரும்ப அனுப்புவதால் அவற்றை பயன்படுத்த முடிகிறது

 • சொல்லப்போனால், பெரும்பாலான உலோகங்களில் கண்ணுக்கு தெரியும் ஒளி கூட பிரதிபலிக்கப்படும். ஆனால் பிரதிபலிப்பு என்பது, முழுவதும் பொருளைப் பொறுத்தது அல்ல. நல்ல மேல்பரப்பு (surface) இருந்தால், பிரதிபலிப்பு நன்றாக இருக்கும். ஆனால், மெல்பரப்பு சொரசொரப்பாக இருந்தால், பிரதிபலித்து வரும் கதிர்கள் (மின்காந்த அலைகள்) வெவ்வேறு திசைகளில் சென்று சரியான பிம்பம் வராமல் போய்விடும்.


ஆனால், இப்படி எலக்ட்ரான்கள் உலோகத்தின் ‘தோலுக்கு' வரும்பொழுது, அதிக அளவு மின்னூட்டமும், மின்புலமும் ஏற்படும். அது, மேகங்களில் அதிக அளவு மின்னூட்டம் இருப்பது போல இருக்கும். இதனால், மைக்ரோ வேவில் ஏதாவது ஒரு பகுதியில் மின்னல் போல (காற்றை அயனியாக்கி) செல்லும். மைக்ரோ வேவில் பெயிண்ட் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதால் கருகி நாற்றம் வர வாய்ப்பு உண்டு.

இந்த உலோகமே, வட்டமாக, கூர்முனை இல்லாமல் இருந்தால், அவ்வளவு சுலபத்தில் ‘மின்னல்' வராது. ஏனென்றால், ஒரே மின்னூட்டத்திற்கு, கூரிய முனை இருந்தால் அதிக மின்னழுத்தம் (voltage) இருக்கும். ‘மொன்னை'யாக இருந்தால், குறைந்த மின்னழுத்தம்தானிருக்கும்.

சில சமயங்களில், பிட்சா போன்ற பொருள்களை மைக்ரோ வேவில் வைக்கும்பொழுது மேலே அலுமினியம் தகடு (aluminum foil) வைத்து சூடுபடுத்துவார்கள். அப்போது பொறி பறக்காது.

மைக்ரோ வேவில் உலோகங்களை வைத்து சூடு படுத்தி உருக்கக்கூட முடியும். மைக்ரோ வேவ் அடுப்பே உலோகத்தால் ஆனது, அதன் பக்கச் சுவர்கள் எல்லாம் உலோகத்தால் ஆனவை என்பதை கவனிக்கவும்! அவை உலோகத்தால் ஆனதால், அங்கு படும் மைக்ரோ வேவ் பிரதிபலிக்கப் படுகிறது. அதனால் மைக்ரோ வேவ் அலை, அடுப்பை விட்டு வெளியே வராது.

எனவே மைக்ரோ வேவில் உலோகம் இருந்தால் பிரச்சனை என்று சொல்லக்கூடாது. மைக்ரோ வேவ் அடுப்பு செய்யவே உலோகம் தேவை. சில சமயங்களில் மைக்ரோ வெவில் சில உலோகங்கள் (கூர் முனை உடையவை) இருந்தால் பிரச்சனை. சரியாக செயல்படுத்தினால் பிரச்சனை இல்லை.

மைக்ரோ வேவின் முன் பகுதியில் கண்ணாடி இருக்கும். உண்மையில் கண்ணாடி வழியே மைக்ரோ வேவ் சுலபமாக ஊடுருவி செல்லுமே, அப்பொழுது நம்மை பாதிக்காதா?

சற்று கவனமாகப் பார்த்தால், அந்த கண்ணாடியில் குறுக்கும் நெடுக்குமாக உலோக இழைகள் செல்வது தெரியும். மைக்ரோ வேவின் அலை நீளம் சில செண்டி மீட்டர்கள் இருக்கலாம். மின்காந்த அலைகள் வெளியே வராமல் தடுக்க, முழுதாக உலோகம் (அதாவது அந்த மின்காந்த அலையை எதிரொளிக்கும் பொருள்) இருக்க வேண்டியதில்லை. அதன் அலை நீளத்தை விட சிறிய ஓட்டை இருந்தால், மின்காந்த அலை வெளியே செல்ல முடியாது. இந்த உலோகக் கம்பிகள் வேலிபோல மைக்ரோ வேவை தடுத்து நிறுத்தி திருப்பி அடுப்புக்கு உள்ளே அனுப்புகின்றன.

இந்த கம்பிகள் மட்டும் இல்லாவிட்டால், நாம் மைக்ரோ வேவ் அலைகளால் மிக மோசமாக பாதிக்கப்படுவோம். சாதாரணமாக, நெருப்பு (அல்லது சூடான பொருள்) உடலில் பட்டால், முதலில் நமது தோல் பாதிக்கப்படும். அடுத்து உள்ளிருக்கும் சதைகள் சூடாகி பாதிக்கப்படும். அடுத்து உள் உறுப்புகள் (எ.கா. இதயம்) பாதிக்கப்படும்). மொத்தத்தில் மிக மிக அதிக வெப்பத்தில் கொஞ்ச நேரமாவது இருந்தால்தான் இதயம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படும்.

மைக்ரோ வேவில் அப்படி இல்லை. இது பொருளை ‘மொத்தமாக' சூடு படுத்தும் திறன் உடையது. ஒரே நொடி மைக்ரோ வேவ் வெளி வந்தால் கூட, அது செல்லும் பாதை 'முழுவதையும்' சூடு படுத்தும்.

உதாரணமாக, முதல் நொடியில் இருந்தே இதயம் மூளை என்று உடலின் எல்லாப் பகுதிகளும் சூடு படுத்தப்படும். உடல் வெப்ப நிலை ஓரிரு டிகிரி எகிறினாலே, மிக மிக பாதிக்கப்படுவோம். தோலில் சூடு படுவது வேறு, உடல் முழுவதும் சூடு படுவது வேறு. காய்ச்சலில் உடல் முழுவதும் வெப்ப நிலை ஏறினால், 101 டிகிரியிலேயே நாம் படும் பாடு சொல்லி முடியாது. 105 பாரன்ஹீட் அதாவது சுமார் 3 டிகிரி சென்டிகிரேடு ஏறினால், ஜன்னி வந்து இறக்கும் நிலைக்கு சென்று விடுவோம்.

அதனால் தான், மைக்ரோ வேவ் வேலை செய்யும் பொழுது கதவை நாம் திறந்தால், உடனே மைக்ரோ வேவ் நின்று விடும். இதற்கு Safety Lock (காப்பு பூட்டு?) என்று சொல்வார்கள். இதனால்தான் நமக்கு பாதுகாப்பு.

Thursday, June 26, 2008

மைக்ரோ வேவ் வேலை செய்யும் விதம். பகுதி 2

இதற்கு முந்திய பதிவில், மைக்ரோ வேவ் அடுப்பில் தண்ணீர் சூடாகும் என்றும், எண்ணெய் சூடாகாது என்றும் பார்த்தோம். அதன் காரணம் என்ன?

திரவ நிலையில் இருக்கும் நீரில், H2O என்ற மூலக்கூறுகள் பலவும், ஓரளவு நெருக்கமாக இருக்கும். ஒவ்வொரு தண்ணீர் மூலக்கூறிலும், இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவும் இருக்கும். இவற்றின் இடையே, எலக்ட்ரான்கள் இருக்கும்.

இந்த வகை மூலக்கூறுகளில், எலக்ட்ரான்கள் சரியாக நடுவில் இருக்காது. “கொஞ்சம்” ஆக்சிஜன் அணுவின் பக்கத்தில் இருக்கும். அதனால், ஹைட்ரஜன் பக்கம் கொஞ்சம் பாஸிடிக் போலவும், ஆக்சிஜன் பக்கம் கொஞ்சம் நெகடிவ் போலவும் இந்த மூலக்கூறு இருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் "polar molecule" போலார் மூலக்கூறு என்று சொல்வார்கள். அதாவது ‘பாஸிடிவ், மற்றும் நெகடிவ் இரு துருவங்களும் கொண்ட மூலக்கூறு” என்று சொல்லலாம்.

இப்படிப்பட்ட துருவ மூலக்கூறுகளில், எளிதில் அயனியாகும் மூலக்கூறுகள் கரையும். உதாரணமாக, நாம் உண்ணும் உப்பு (சோடியம் குளோரைடு) சோடியம் அயனியாகவும், குளோரைடு அயனியாகவும் எளிதில் பிரியும். உப்பு தண்ணீரில் எளிதில் கரையும்.

எத்தனால், மெத்தனால் போன்ற கரிம திரவங்கள் கூட, இவ்வகை போலார் மூலக்கூறுகள் தான். கிளிசரின் கூட இந்த வகைதான். தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணைகளிலும், சில இடங்களில் இந்த OH group வருவதால், கொஞ்சம் போலார் மூலக்கூறுகள் ஆகும்.

தண்ணீரில், மைக்ரோ வேவ் செல்லும் பொழுது, இந்த மூலக்கூறுகள் மைக்ரோ வேவை 'உறிஞ்சுகின்றன' (ஒரு பொருளில் மின்காந்த அலை செல்லும் பொழுது ஊடுருவி செல்லுமா அல்லது உறிஞ்சப்படுமா, பிரதிபலிக்கப்படுமா என்பது பற்றி தனிப்பதிவு வரும்.)
இவ்வாறு உறிஞ்சப்படும்பொழுது, இவற்றின் ஆற்றல்கள் அதிகரிக்கின்றன. அதிகரித்த நிலையில் இருந்து, பழைய நிலைக்கு வரும்பொழுது, அதே மைக்ரோவேவை வெளியிட்டால், நமக்கு எந்த மாற்றமும் தெரியாது. ‘உள்ளே மைக்ரோ வேவை செலுத்தினோம், கொஞ்ச நேரம் கழித்து வெளிவே வந்தது' என்பது மட்டுமே தெரியும்.

 • சுத்தமான தண்ணீரில், கண்ணுக்கு தெரியும் ஒளியானது செல்லும்பொழுது,இப்படித்தான், எலக்ட்ரான்கள் ஒளியில் ஆற்றலை எடுத்துக்கொண்டு மேல் மட்டத்திற்கு செல்லும். மீண்டும் கீழே வரும்பொழுது ஆற்றலை அதே அளவு வெளியிடும். இப்படி தண்ணீரில் இருக்கும் எல்லா மூலக்கூறுகளும் வெளியிடும் பொழுது, ஒளி (originalலாக) செல்லும் திசைக்கு ஏறக்குறைய ஒத்துவரும் திசையில், கட்டங்கள் (phase) ஒன்று சேரும். அதனால், ஒளி கொஞ்சம் விலகியது போல, ஏறக்குறைய முதலில் செல்லும் திசையிலேயே செல்லும். கொஞ்சம் அளவு ஒளி, எதிர் திசையிலும் செல்லும் (அதிலும் கட்டங்கள் சரியாக ஒன்று சேரும்). அதனால், கொஞ்சம் எதிரொளிப்பு இருக்கும். இப்படித்தான் தண்ணீரில் ஒளி ஊடுருவி செல்கிறது.


ஆனால் மைக்ரோ வேவில் எலக்ட்ரான்கள் மேல் ஆற்றல் மட்டத்திற்கு செல்லும் அளவு ஆற்றல் இல்லை. அதற்கு பதிலாக மூலக்கூறு மேல் ஆற்றல் மட்டத்திற்கு செல்லும் அளவு உண்டு. (குவாண்டம் இயற்பியல் படி, எல்லா பொருள்களுக்குமே ஆற்றல் மட்டங்கள் உண்டு. நாம் பொதுவாகப் படிப்பது எலக்ட்ரான்களைப் பற்றி மட்டும்.) அப்படி சென்ற மூலக்கூறுகள், 'பொத்'தென்று கீழ் ஆற்றல் மட்டத்திற்கு விழுந்து, மீண்டும் மைக்ரோ வேவை வெளியிட்டால், மைக்ரோ வேவ் கூட ஊடுருவி சென்று விடும். ஆனால், அதற்கு பதிலாக, அவை அருகில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு, ஆற்றலை பகிர்ந்து கொடுக்கும். இப்படி குறைந்த அளவு ஆற்றலை சேர்க்கும் பொழுது, மூலக்கூறுகள், அவற்றை பெற்று என்ன செய்யும்?

ஒரு மூலக்கூறின் மொத்த ஆற்றல் பலவிதமாக இருக்கும். எலக்ட்ரான்கள் மேல்மட்டத்திற்கு செல்ல அதிக ஆற்றல் தேவை. புரோட்டான்கள், மற்றும் நியூட்ரான்கள் மேல்மட்டத்திற்கு செல்ல் மிக் மிக அதிக ஆற்றல் தேவை. மூலக்கூறு ‘அதிர்வு' (vibration) அதிகரிக்க குறைந்த ஆற்றல் தேவை. மைக்ரோ வேவை ஏற்றுக்கொண்ட தண்ணீர், அந்த ஆற்றலை பகிர்ந்து அளிக்கும் பொழுது, மூலக்கூறின் அதிர்வு அதிகரிக்கும். (அந்த அளவுதான் ஆற்றல் இருக்கும்).

பள்ளி பாடப் புத்தகளில் கூட, Fluoroscence (sp?), phosphoroscence என்று படித்திருக்கலாம். புற ஊதாக் கதிர்களை எடுத்து, கொஞ்சம் ஆற்றலை வேறு வழிகளில் பகிர்ந்து, மீதி ஆற்றலை வெளியிடும்பொழுது, கண்ணுக்கு தெரியும் ஒளியாக வரும் அல்லவா? அதைப் போல, இங்கு தண்ணீர் மைக்ரோ வேவை எடுத்து, மூலக்கூறின் அதிர்வாக மாற்றுகிறது.

'வெப்ப நிலை' என்பது மூலக்கூறுகளின் அதிர்வேயாகும். பூஜ்யம் கெல்வின் வெப்ப நிலையில் மூலக்கூறுகளுக்கு அதிர்வு இருக்காது (இதில் ‘zero point motion' என்ற விதி விலக்கு உண்டு). வெப்ப நிலை அதிகரிக்கிறது என்று சொன்னால், அதிர்வுகள் அதிகரிக்கின்றன என்று பொருள்.

மைக்ரோ வெவின் அலை எண், தண்ணீர் அதை எடுத்து அதிர்வாக மாற்றும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே தண்ணீர் வெப்பமாகிறது.

தேங்காய் எண்ணெயில் உள்ள போலாரிடி (polarity) குறைவு. அதனால் மிகச் சிறிய அளவே வெப்பம் அடையும். பெரும்பாலான மைக்ரோ வேவ், உள்ளே ஊடுருவி செல்லும்.

பாரபின் ஆயில், lubricating oil ஆகியவை non-polar எனப்படும். இவற்றில் OH group கிடையாது. அதனால்தான் அந்த எண்ணெய்கள் சூடாவது இல்லை. (அதைப் போலவே,இவற்றில் பாக்டீரியா வளர்வது சிரமம். தேங்காய் எண்ணென் கொஞ்ச நாள் கழித்து ‘சிக்கு' வாசனை வரும். பாரபின் ஆயிலில் வராது)


மைக்ரோ வேவில் உலோகம் வைத்தால் ஏன் பொறி பறக்கிறது ? பதில் அடுத்த பதிவில்.

Wednesday, June 25, 2008

மைக்ரோ வேவ் வேலை செய்யும் விதம்

மைக்ரோ வேவ் (Microwave) என்பது சமையல் அறையில் சில பொருள்களை சூடுபடுத்த பயன்படும் சாதனம் ஆகும். இதில் ஒரு விதமான் மின்காந்த அலைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை மைக்ரோ வேவ் (micro wave) என்று சொல்லப்பட்டாலும், இவற்றின் அலை நீளம் (Wave length) சில செ.மீ. அளவில் இருக்கும். இவை மைக்ரோ வேவ் என்று சொல்லப்படுவது வழக்கினால்தான். முதலில் ரேடியோ அலை (வேவ்) பற்றி ஆராய்ச்சி செய்தார்கள். ரேடியோ அலைகள் மீட்டர் கணக்கில் இருக்கும். அதைவிட சிறிதாக அலை நீளம் கொண்ட இந்த அலைகளைப் பற்றி அடுத்து ஆராய்ந்தார்கள். இவை சிறிய அலை நீளம் கொண்டவை என்று குறிக்க ”மைக்ரோ வேவ்” என்ற பெயரை பயன்படுத்தினார்கள். உண்மையில் இவற்றின் அலை நீளம் மைக்ரான் அளவில் இல்லை. மைக்ரான் அளவில் அலை நீளத்துடன் இருப்பவை அகச்சிவப்பு கதிர்கள் ஆகும்.

சரி, அது பழைய கதை. இந்த மைக்ரோ வேவ் என்ற அலைகளை, வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் கருவியில், மின்சாரத்தை இந்த அலைகளாக மாற்ற ஒரு ”மைக்ரோ வேவ் ஜெனரேட்டர்” என்ற பாகம் உண்டு. இதன் மூலம் 2.45 GHz அதிர்வெண்ணில் இந்த அலைகள் உருவாகும்.

சமையலைப் பொறுத்த வரை இந்த மைக்ரோவேவின் நிறை என்ன? குறை என்ன?

ஒரு பிளாஸ்டிக் குவளையில் தண்ணீரை வைத்து, இந்த மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்தால், தண்ணீர் சூடாகிவிடும். ஆனால், குவளை நேரடியாக மைக்ரோ வேவில் சூடாகாது. சுடுநீர் பட்டதால், குவளை கொஞ்சம் சூடாகி விடும்.

இதனால், பாத்திரம் சூடாகாமல், பொருள் மட்டும் சூடாகும். செலவு மிச்சம். தவிர, மைக்ரோ வேவ், தண்ணீர் முழுவதையும் சூடாக்கும். இதை சரியாக விளக்க வேண்டும் என்றால், ஒரு காஸ் அடுப்பில் பாத்திரம் வைத்து, தண்ணீர் அல்லது அரிசியை சூடாக்கினால், முதலில் பாத்திரம் சூடாகும். அடுத்து பாத்திரத்தை ஒட்டி இருக்கும் தண்ணீர் அல்லது அரிசி சூடாகும். அரிசியை கிளறாமல் வைத்தால், பாத்திரத்தை ஒட்டி இருக்கும் அரிசி தீய்ந்து விடும். அதே சமயம், பாத்திரத்தில் மேலிருக்கும் அரிசி சூடாகாது.

ஆனால் மைக்ரோ வேவில், அரிசி முழுவதும் ஒரே சமயத்தில் சீராக சூடாகும். அதனால், ‘வெளியில் கருகி, உள்ளே வேகாமல் இருக்கும்' பிரச்சனை வராது.

மைக்ரோ வேவில் தண்ணீர் விரைவாக சூடாகும். இதுவும் ஒரு நிறைதான்.

குறைகள் என்ன? தண்ணீருக்கு பதில், மைக்ரோ வேவில் நல்லெண்ணையை வைத்தால், சூடாகாது. இரண்டு நிமிடம் வைத்தால் கூட மிஞ்சிப்போனால் மிதமான சூடு அடையலாம். தேங்காய் எண்ணெய், வெண்ணெய் என்று நாம் பயன்படுத்தும் தாவர மற்றும் விலங்கின கொழுப்புக்கள் எல்லாம் இப்படி மிகக் குறைந்த அளவே சூடாகும். ரொம்ப நேரம் இப்படி வைத்தால், மைக்ரோ வேவ் கெட்டுப்போக வாய்ப்பு உண்டு.

அதனால்தான் மைக்ரோவேவில் காபி அல்லது டீ போடலாம். அரிசி சாதம் வைக்கலாம், அப்பளம் சுடலாம், ஆனால் அப்பளம் பொரிக்க முடியாது. ஏனென்றால் எண்ணெய் சூடாகாது.
அப்பளம் பொரிப்பதோ, கடுகு கறிவேப்பிலை தாளிப்பதோ நடக்காது. அதனால் தான், இந்திய சமயல்களில் இது அதிகம் பயன்படுவதில்லை. ஃப்ரிஜ்ஜில் இருந்து எடுப்பதை மறுபடி சூடு செய்யவே (reheating) இது அதிகம் பயன்படுகிறது.

இது தவிர பெட்ரோலியத்தை சார்ந்த 'வாகனங்களில் பயன்படுத்தும் எண்ணெய்' (lubricating oil) எடுத்தால் ? பல நிமிடங்கள் வைத்தாலும் கொஞ்சம் கூட சூடே ஆகாது.
(இதை எதற்கு மைக்ரோ வேவில் வைத்தாய் என்று கேட்க வேண்டாம், எனக்கு இந்த வேண்டாத ஆராய்ச்சிகள் கொஞ்சம் பிடிக்கும்).


ஏன் தண்ணீர் சூடாகிறது? ஏன் நல்லெண்ணை கொஞ்சம் தான் சூடாகிறது? ஏன் பெட்ரோலிய எண்ணெய் சூடாவதில்லை? உலோகத்தை மைக்ரோவேவில் வைத்தால் ஏன் பிரச்சனை? இவை அடுத்த பதிவில்.


சில ‘சுவையான' விவரங்கள்:
 1. மைக்ரோ வேவில் முந்திரி, பாதாம் பருப்புகளை ஒரு நிமிடம் சூடு படுத்தினால் சுவையாக இருக்கும். உருளைக் கிழங்கு சிப்ஸ் கூட அப்படித்தான். இதை கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். அதிக நேரம் வைத்தால் தீய்ந்து விடும். ஆனால் இவற்றுக்கு பதில் ரொட்டியை (bread) வைத்தால் நைந்து ‘கொச கொச' என்று ஆகிவிடும்.

 2. இதே தண்ணீரையோ, வேறு பொருளையோ எவர்சில்வர் டம்ளரில் வைத்து மைக்ரோ வேவில் வைத்தால் என்ன ஆகும்? எவர்சில்வர் டம்ளரை மைக்ரோ வேவில் வைக்கக்கூடாது என்று சொல்வார்கள். மீறி வைத்தால், மின்னல் அடிப்பது போல பொறி பறக்கும். மைக்ரோ வேவ் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் அல்லது பெயிண்ட் கருகி துர்நாற்றம் வரலாம். இது ஒரு சில விநாடிகளில் நடக்கும்.
  • ஆனால், எல்லா சமயங்களிலும் இப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது. சில டம்ளர்களில் வராமல் இருக்கலாம். கூர் முனை (Sharp edges) கொண்ட பொருள்களில், இது வர வாய்ப்பு அதிகம். Fork என்ற முள் கரண்டியை வைத்தால் நிச்சயம் பொறி பறக்கும். இது கொஞ்சம் ஆபத்தான Experiment. கூர் முனைகளில் மின்காந்தப்புலம் அதிகமாக இருப்பதால் இப்படி நடக்கும். கட்டிடங்களின் மேல் இருக்கும் இடிதாங்கிகள் கூர் முனையுடன் இருக்கும். அதுவும் இதே அடிப்படை தத்துவத்தில் வேலை செய்கிறது.

 3. மைக்ரோ வேவில் முட்டையை வைத்தால், சில நிமிடங்கள் சூடு படுத்தினால் முட்டை ‘வெடிக்கும்'. இதுவும் கொஞ்சம் ஆபத்தான experiment தான். இதில் சுத்தப்படுத்தும் வேலை நிறைய இருக்கும் :-) . இதற்கு காரணம், முட்டைக்குள் இருக்கும் நீர் ஆவியாக மாறி, திடீரென்று முட்டையை உடைத்து வெளிவருவதால்தான். சாதாரணமாக தண்ணீரில் வேகவைத்தால், உள்ளே இருக்கும் நீர் அதிக அளவில் ஆவியாக மாறாது.

 4. இது தவிர, மைக்ரோ வேவில், ஒரு குவளையில் தண்ணீரை வைத்து, அது கொதிப்பதற்கு ஒரு சில விநாடிகள் முன் எடுத்து விட்டு, அந்த தண்ணீரில் சக்கரை அல்லது உப்பு அல்லது காப்பித்தூள் போட்டால், தண்ணீர், குபீரென்று பொங்கி வழியும். இதில் supersaturation என்ற ஒரு காரணம் உள்ளது.


இவற்றிற்கான காரணங்களை கூகிளில் தேடினால் இன்னும் விவரமான பதிவுகள்(ஆங்கிலத்தில்) பதிவுகள் கிடைக்கும்.

இயற்பியல் பதிவு தொகுப்பு - 1

இதுவரை, ஒரு துறை அல்லது தலைப்பு சார்ந்த பதிவுகளை எழுதி வந்தேன். அடுத்த முயற்சியாக, கொஞ்சம் கலவையான (Miscellaneous) பதிவுகள் எழுத இருக்கிறேன். இவையும் அறிவியல் சார்ந்தவைதான் என்றாலும், பதிவுகள் தொடர்ந்து கோர்வையாக இல்லாமல், பல திசைகளிலும் (many directions) இருக்கும். தொடக்கத்தில் இயற்பியல், குறிப்பாக குவாண்டம் இயற்பியல் மற்றும் மின்காந்தவியல் சார்ந்த பதிவாக எழுத ஆரம்பிக்கிறேன். முடிந்தவரை இப்பதிவுகள் சமன்பாடுகள் இல்லாமல் இருக்கும்.

நான் கல்லூரியில் "The Feynman Lectures on Physics" என்ற தலைப்பில் உள்ள மூன்று புத்தகங்களையும், சார்ல்ஸ் கிட்டல் (Charles Kittel) எழுதிய ‘An introduction to Solid State Physics" புத்தகத்தையும், ஸ்டீபன் ஹாகின்ஸ் எழுதிய "A Brief History of time" புத்தகத்தையும் பல வருடங்களுக்கு முன் நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் விற்ற மிர் பதிப்பக புத்தகத்தையும் (புத்தகத்தின் பெயர் ஞாபகம் இல்லை) படித்து புரிந்து கொண்டவற்றை ஆதாரமாக வைத்து இப்பதிவுகளை எழுதுகிறேன்.

இவை கதம்பம் போல தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பல பதிவுகளை இன்னமும் எழுதவில்லை. ஒவ்வொரு பதிவும் எழுதியவுடன் இணைப்பு (லின்க்) கொடுக்கப்படும்.

1. ஒளி எவ்வாறு ஒரு திடப்பொருள் (எ.கா. கண்ணாடி) வழி செல்கிறது? பாகம் -1, எதிரொளித்தல்,ஒளிவிலகல், ஒளி உறிஞ்சுதல்(Reflection, Refraction and Absorption)பாகம் -2.

2. மைக்ரோ வேவ் அடுப்பு வேலை செய்யும் விதம் பகுதி-1,பகுதி-2,பகுதி-3.

3. Black Hole (கருங்குழி) பற்றிய விவரங்கள்: அறிமுகம் பகுதி-1: , கருங்குழியின் பண்புகள் பகுதி-2., கருங்குழியின் வித்தியாசமான பண்புகளுக்கு காரணம், பகுதி-3, கருங்குழி - வரலாறு பகுதி-4 .

4. திடப்பொருளின் வெப்ப நிலைபகுதி-1, மின்கடத்தும் திறன்- பகுதி-2,வெப்பம் கடத்தும் திறன் -குவாண்டம் இயற்பியலின் பார்வையில்.

5. டிஜிட்டல் கேமரா அடிப்படைத் தத்துவம் (சாதாரண கேமராவில் இருக்கும் லென்ஸ் பற்றிய விவரங்கள் இதில் இருக்காது)

6. நேனோ தொழில் நுட்பம் பற்றி மேலோட்டமான பதிவு (Nano technology-overview). மற்ற பதிவுகளில், அறிவியல் தொடர்பான கருத்துக்கள் மட்டுமே இருக்கும். நேனோ பதிவில் என் சொந்த சரக்கும் (opinions) இருக்கும்.

7. அலை இயந்திரவியல் (Wave Mechanics) அறிமுகம்-பகுதி-1 , பகுதி-2 , அலை குறுக்கீடு / Interference - ஃபூரியே மாற்றம் / Fourier Transform பகுதி-3, குவாண்டம் இயற்பியலில் அலைப்பண்புகள்-பகுதி-4. அலை இயந்திரவியலைப் படித்த பின்னர், ஹைசன்பர்க் பற்றியும், ஷ்ரோடிங்கர் பற்றியும் படித்தால் கொஞ்சம் சுலபமாக இருக்கும்.

8. ஹைசன்பர்க் தத்துவம் - பகுதி -1, பகுதி-2, பகுதி-3.

9. ஷ்ரோடிங்கர் சமன்பாடு - ஷ்ரோடிங்கர் வரலாறு, சமன்பாடு

10. துகள், எதிர்மறை துகள் (particle, anti-particles)

Tuesday, June 24, 2008

காற்றில் மாசு-7. பங்களிப்பை கணக்கிடுதல்

பலவிதமான இடங்களில் இருந்து வரும் மாசுக்கள் அனைத்தும் சேர்ந்து காற்றில் மாசின் அளவு கூடுகிறது. எடுத்துக்காட்டாக, கரி அடுப்பில் இருந்து வரும் தூசி, வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, வீட்டில் இருந்து வரும் தூசி இவை அனைத்தும் சேர்ந்துதான் மொத்த மாசு அதிகரிக்கிறது. இந்த வகை மாசு தோன்றுமிடம் (Pollution Source) ஒவ்வொன்றிலிருந்தும் எவ்வளவு மாசு ஓரிடத்தில் சேர்கிறது என்பதை நாம் கணிக்கலாம்.

அதைத்தவிர, நாம் எவ்வளவு மாசு இருக்கிறது என்பதை அளவிடலாம்(measure). இப்படி அளவிட்ட மாசை நன்கு ஆராய்ந்தால், அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பதையும் கண்டு பிடிக்கலாம். அதாவது, ”இந்த மாசில் சுமார் 25% வாகனங்களில் இருந்தும், 30% புழுதியில் இருந்தும், 20% தொழிற்சாலைகளில் இருந்தும் வருகின்றன. மீதி எங்கிருந்து என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை” என்ற அளவில் கண்டுபிடிக்கலாம். இது எப்படி என்பதை சில உதாரணங்களின் மூலம் பார்க்கலாம்.

எடுத்துக்காட்டு 1: ஒரு இடத்தில் தொழிற்சாலையில் இருந்து வரும் தூசியில் 25% சோடியமும், 50% இரும்பும் , மீதி 25% மற்ற பொருள்களும் இருக்கலாம். தெருவில் இருக்கும் புழுதியில் 25% அலுமினியமும், 10% இரும்பும் (சிலிக்கன் போல மற்றவை மீதி 65% என்றும்) இருக்கலாம்.மாசு தோன்றுமிடம் தனிமம்அளவு
தொழிற்சாலைசோடியம்25%
இரும்பு 50%
இதர தனிமங்கள் 50%
புழுதி தூசிஅலுமினியம்25%
இரும்பு 10%
இதர தனிமங்கள் 65%இங்கு இதர தனிமங்கள் என்பதில் சோடியம், அலுமினியம், இரும்பு ஆகியவை இல்லாமல் மற்ற பொருள்கள் என்று புரிந்து கொள்வோம்.

இப்போது, நாம் அந்த பகுதியில் சென்று அங்குள்ள காற்றில் இருக்கும் தூசிகளை சேகரிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கிராம் தூசி சேர்ந்ததும் அதை ஆராய்ச்சிக்கு அனுப்பி, அதில் இருக்கும் சோடியம், அலுமினியம் மற்றும் இரும்பின் அளவை கண்டுபிடித்து விடுகிறோம். இதில்
 • ஒரு கிராமில், அலுமினியம் 0.25 கிராம், இரும்பு 0.1 கிராம், இதர பொருள்கள் 0.65 கிராம் என்று வந்தால், தூசி முழுவதும் புழுதிதான் என்று சொல்ல முடியும். ஒருவேளை தொழிற்சாலை அன்று வேலை செய்யாமல் இருக்கலாம். அல்லது தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகையில் தூசிகள் வடிகட்டப்பட்டு இருக்கலாம். மொத்தத்தில், தொழிற்சாலையால் காற்றில் தூசிகள் சேர்வதில்லை என்று சொல்ல முடியும்.

 • இன்னொரு நாள் ஒரு கிராம் தூசியில் ஆராய்ச்சி செய்தால், அதில் 0.5 கிராம் இரும்பு, 0.25 கிராம் சோடியம், இதர பொருள்கள் 0.25 கிராம் என்று வந்தால், அங்கு தூசி முழுவதும் தொழிற்சாலையில் இருந்துதான் என்று சொல்லலாம். ஒருவேளை போக்குவரத்து குறைவாக இருப்பதால், காற்று வேகமாக அடிக்காததால், புழுதியானது காற்றில் கலக்காமல் இருக்கலாம். மொத்தத்தில் தொழிற்சாலைதான் காற்றில் மாசு சேர்க்கிறது என்று சொல்லலாம்.

 • ஒரு பேச்சுக்கு, 0.4 கிராம் தொழிற்சாலை தூசியும், 0.6 கிராம் புழுதியும் சேர்ந்து நமது Sample வருவதாக வைத்துக்கொள்வோம்.
  • அப்பொழுது, சோடியத்தின் அளவு 0.4 * 0.25 = 0.1 கிராம் ஆகும்.
  • இரும்பின் அள்வு: தொழிற்சாலை தூசியில் இருந்து, 0.4 * 0.5 = 0.2 கிராம். புழுதியில் இருந்து, 0.6 * 0.1 = 0.06 கிராம். மொத்தத்தில், 0.2 + 0.06 = 0.26 கிராம்.
  • அலுமினியத்தின் அளவு: 0.6 * 0.25 = 0.15 கிராம்.
  • இதர பொருள்கள்: தொழிற்சாலையில் இருந்து, 0.4 * 0.25 = 0.2கிராம். புழுதியில் இருந்து, 0.6 * 0.65 = 0.39 கிராம், மொத்தம் 0.2 + 0.39 = 0.59 கிராம்.

  ஆக மொத்தம் தூசியில், 0.1 கிராம் சோடியம், 0. 26 கிராம் இரும்பு, 015 கிராம் அலுமினியம், இதர பொருள்கள் 0.59 கிராம் என்று இருக்கும். நமக்கு இந்த தூசியில் தொழிற்சாலையின் பங்களிப்பு எவ்வளவு, புழுதியின் பங்களிப்பு எவ்வளவு என்று கணிக்க முடியுமா?

  முடியும். உதாரணமாக, அலுமினியம் தொழிற்சாலை தூசியில் இருந்து வராது. எனவே, 0.15 கிராம் அலுமினியம், புழுதியில் இருந்துதான் வரும். ஒரு கிராம் புழுதியில் இருந்து 0.25 கிராம் அலுமினியம் வரும். எனவே, 0.15 கிராம் அலுமினியம் இருக்கிறது என்றால், 0.6 கிராம் புழுதியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.

  அதைப்போலவே, சோடியம் தொழிற்சாலை தூசியில் இருந்துதான் வரும். புழுதியில் இருந்து வர முடியாது. அதையும் கணக்கிட்டால், 0.4 கிராம் தொழிற்சாலை தூசியாக இருக்கும் என்று கணிக்கலாம்.

  இந்த எடுத்துக்காட்டில் சுலபமாக சொன்னாலும், பல விதமான தனிமங்களை ஆராய்வதன் மூலம், ஓரளவு சரியாக எந்த இடத்திலிருந்து தூசி எவ்வளவு வருகின்றது என்பதை கணிக்க முடியும்.
 • இன்னொருநாள் ஆராய்ச்சி செய்தால் ஒரு கிராம் தூசியில் சோடியம் 0.5 கிராம் வருகிறது. இரும்பு சுத்தமாக கிடையாது. அலுமினியமும் இல்லை. இப்பொழுது என்ன முடிவுக்கு வர முடியும்?

  ஒன்று நாம் செய்த ஆராய்ச்சி தவறு. சோடியம் இருக்கும் பொழுது இரும்பும் இருக்க வேண்டும். இரும்பு கணக்கிடும்பொழுது, ஆராய்ச்சியில் தவறு நடந்து இப்படி வந்திருக்கலாம். அல்லது சோடியம் கணக்கில் தவறு இருக்கலாம்.

  இரண்டாவது, நாம் நினைத்தது, இந்த பகுதியில் தொழிற்சாலை மற்றும் புழுதி மட்டுமே தூசிக்கு காரணம் என்று. ஆனால், வேறு வகை தூசிகளும் இந்த பகுதியில் சேர்ந்து இருக்கலாம். அந்த தூசிகளில் சோடியம் இருந்து, இரும்பு இல்லாவிட்டால், ஆராய்ச்சி சரியாக இருக்கிறது, நம் நினைப்புதான் தவறு, நாம் மறுபடி அந்த பகுதிக்கு சென்று, வேறு என்ன வகையில் தூசிகள் சேரலாம் என்று அறிய வேண்டும்.


மேல்கண்ட கணக்கிற்கு Chemical Mass Balance அல்லது சுருக்கமாக சி.எம்.பி.(CMB)என்று பெயர். இது reverse calculation மூலம் ஒவ்வொரு மாசு மூலமும் (pollution source) எவ்வளவு பங்களிக்கிறது என கணக்கிட உதவும்.

காற்றில் மாசு பற்றி இதுவே கடைசி பதிவு. அடுத்து இயற்பியல் சம்பந்தப்பட்ட பதிவுகள் எழுத இருக்கிறேன்.

Saturday, June 21, 2008

காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் - அட்டவணை (Airp Pollution Control - Index)

காற்றில் மாசு கணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான பதிவுகளை இங்கு தொகுத்திருக்கிறேன்.

 1. தொடக்கம் (Introduction). இதில், தூய்மையான காற்றின் முக்கியத்துவம் பற்றி கருத்துக்கள், மற்றும் காற்றில் இருக்கும் மாசுக்களை பொதுவாக எப்படி வகைப்படுத்துவது ஆகியவை இருக்கின்றன.

 2. கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு மாசுக்கள் பற்றிய விவரங்கள் இரண்டாம் பதிவில்.

 3. கந்தக வாயு, ஓசோன், VOC என்ற ”எளிதில் ஆவியாகும் பொருள்கள்” என்ற மூன்று வகை மாசுக்கள் பற்றி, மூன்றாம் பதிவில்.

 4. நான்காம் பதிவில், ஒரு ஊரில் அல்லது பகுதி(area)யில் காற்றில் சேரும் மாசின் அளவை கணிப்பது எப்படி (how to estimate the pollution level)என்பது பற்றிய விவரங்கள்

 5. ஐந்தாம் பதிவில், காற்றில் இருக்கும் மாசுக்களை அளப்பது எவ்வாறு (Measuring or monitoring pollution level) என்பது பற்றிய விவரங்கள் உள்ளன.

 6. ஆறாவது பதிவில், காற்றில் சேரும் மாசுக்கள் எவ்வளவு பரவுகின்றன என்பது பற்றிய விவரங்கள் உள்ளன. இதை கணக்கிட, (என் முதல் முயற்சியாக) தமிழ் மென்பொருளும் அப்பதிவில் இருக்கிறது.

 7. அடுத்து, ஏழாவது பதிவில், காற்றில் இருக்கும் மாசை ஆராய்வதன் மூலம், எதிலிருந்து மாசு வருகிறது என்று கணக்கிடுவது பற்றிய விவரங்கள் (How to reverse calculate the source of pollution, from analyzing the pollutants)

Sunday, June 1, 2008

காற்றில் மாசுக்கட்டுப்படுத்தல்-6 (தமிழில் மென்பொருள்)

காற்றில் மாசு எப்படி பரவுகிறது (disperse) என்பதை கணக்கிடுவதுதான் Dispersion Model என்பதன் அடிப்படை ஆகும். இதைக் கணிக்க பல வகையான வழிகள் உள்ளன. இந்தியாவில் பயன்படுத்துவது ISC 3 (Industrial Source Complex என்பதன் சுருக்கமாகும்).
எல்லா வகையான வழிகளுமே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வல்லுநர்களால் ஏற்படுத்தப்பட்டவை. அமெரிக்காவிலும் முன்னால் இந்த ISC3 மாடலை பயன்படுத்தினார்கள். தற்போது AERMOD என்ற் மாடலை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ISC3 மாடல் வழி, ஒரு இடத்தில் மாசு வெளிவந்தால்,வேறு இடத்திற்கு பரவி எந்த அள்வில் செல்லும் என்பதை கணக்கிட தமிழில் ஒரு மென்பொருள் உருவாக்கி இருக்கிறேன். அதன் screenshot கீழே.

நீங்கள் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதை பயன்படுத்த டாட் நெட் (.NET Framework version 2.0) என்ற மென்பொருள் தேவை. இது ஏற்கனவே உங்கள் கணினியில் இல்லாவிட்டால், மைக்ரோசாஃப்ட
தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் (.NET Framework version 2.0)செய்யலாம். அதன் அளவு, சுமார் 22 MB ஆகும்.

இந்த மென்பொருளை பயன்படுத்தினால் எனக்கு (அ) இந்த மென்பொருளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் உங்கள் கணினியில் சரியாகத் தெரிகிறதா என்பதையும் (ஆ) இந்த மென்பொருளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பதையும் தெரிவிக்கவும்.

இங்கு கவனிக்க வேண்டியவை சில.
 • இந்த மென்பொருளின் மூலம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாசு சேர்க்கும் பொழுது, வேறு இடத்தில் அது பரவும் விதத்தை கணிக்கலாம். இந்த மாசுக்கள் தொழிற்சாலையில் புகைபோக்கி வழியே வரும். இவை point source எனப்படும்.

 • வாகனங்கள் புகை கக்கிக்கொண்டே செல்லும்பொழுது , மாசு பல இடங்களில் சேர்க்கப்படுகிறது. இவை line source எனப்படும். இவற்றால் விளையும் பாதிப்பை இந்த குறிப்பிட்ட மென்பொருளில் கணக்கிட முடியாது. (நான் இன்னமும் அதை தமிழில் எழுதவில்லை)

 • ஒரு பெரிய பரப்பில் இருந்து வரும் புகையானது area source எனப்படும். அதுவும் இந்த மென்பொருளில் கணக்கிட முடியாது


இதைப் பயன்படுத்தும் பொழுது நீங்கள் கொடுக்க வேண்டிய விவரங்கள்.
 1. புகைபோக்கியின் உயரம்: இது அதிகமானால், மாசு தரையில் வரும்பொழுது நன்கு பரவி விடும். அதனால், அதன் அளவு எந்த ஒரு இடத்திலும் குறைவாக இருக்கும்.
 2. புகைபோக்கியின் விட்டம்: இது காற்றின் போக்கை பாதிக்கும். (தரையில்) மாசின் அளவு இதனால் கொஞ்சம் பாதிக்கப்படும்

 3. புகையின் வெப்பனிலை: இது அதிகமானால், புகையின் ‘அடர்த்தி' (density)குறையும். அதனால், புகை மேலே செல்லும். அப்பொழுது, தரையில் அதன் அளவு குறையும்

 4. புகை வெளிவரும் வேகம்: புகை வேகமாக மேல்நோக்கி வந்தால் அதன் அளவு தரையில் குறையும்

 5. மாசு வெளிவரும் அளவு: இது தொழிற்சாலையிலிருந்து ஒரு நொடிக்கு எவ்வளவு கிராம் மாசு காற்றில் சேர்க்கப்படுகிறது என்ற அளவு.

 6. உங்கள் வீட்டிலிருந்து புகைபோக்கி இருக்கும் தொலைவு: X மற்றும் Y (மீட்டரில்). இதில் X என்பது கிழக்கு-மேற்கு. புகைபோக்கி மேற்கில் இருந்தால் -1000 மீ என்று நெகடிவ் எண் கொடுக்க வேண்டும். கிழக்கில் அரை கிலோ மீட்டரில் இருந்தால், 500 மீட்டர் என்று கொடுக்க வேண்டும். Y என்பது வடக்கு-தெற்கு.
 7. புகை போக்கி வடகிழக்கில் இருந்தால்? X = 1000, Y = 800 என்று தகுந்த அளவில் கொடுக்க வேண்டும்

 8. தட்ப வெப்பம்: காற்றின் வேகம் மற்றும் திசை. காற்று வடக்கிருந்து தெற்காக வந்தால் (வாடைக்காற்று) 0 டிகிரி. கிழக்கிருந்து மேற்காக சென்றால், 90 டிகிரி

 9. காற்றின் வேகம் அளக்கப்பட்ட உயரம். புகைபோக்கியானது 50 மீட்டர் உயரத்தில் இருக்கலாம். ஆனால் காற்றின் வேகம் 2 மீ. உயரத்தில் அளக்கப்பட்டு இருக்கலாம். இந்த விவரம் சொன்னால், மென்பொருளானது, ”புகைபோக்கியின் உயரத்தில் காற்றின் வேகம் என்ன” என்பதை கணித்து விடும்

 10. காற்றின் வெப்ப நிலை: இதை மாற்றினால்,தரையில் மாசின் அளவு, நிறைய மாறாது.

 11. கலக்கும் உயரம். ஆங்கிலத்தில் mixing height எனப்படும். இதைப்பற்றி தனிப்பதிவுதான் எழுத வேண்டும். இப்போதைக்கு 1 கி.மீ என்று வைத்துக் கொள்வது போதும். பெரும்பாலும் இது சரியாக இருக்கும்.

 12. பகல்/இரவு: பகலில் சூரிய வெளிச்சத்தின் அளவைப்பொறுத்தும் , இரவில் மேக மூட்டத்தைப் பொறுத்தும் தரையில் மாசின் அளவு நிறைய மாறுபடும். இதற்கு காரணம், மாசு பரவும் விதத்தையும், காற்றோட்டத்தையும் இவை மிகவும் மாற்றுகின்றன.

 13. மாசு decay coefficient: சில மாசுக்கள் காற்றில் சிதைந்து விடும். பெரும்பாலான் மாசுக்கள் அப்படியே இருக்கும்.

 14. உங்கள் வீட்டில் மாசின் அளவை கணிக்க, வீட்டின் உயரம் தேவை.

 15. சுற்று வட்டாரம்: கிராமமா அல்லது நகரமா என்பதைப் பொறுத்து தரையில் வரும் மாசு மிகவும் மாறுபடும். இதற்கு காரணம், காற்று செல்லும் விதம் இந்த இரண்டு இடங்களிலும் வேறுபடும்.


பின்குறிப்பு. இந்த மென்பொருள், Visual Basic .NET 2005இல் எழுதப்பட்டது.